சலூன், டீக்கடை, பூங்காக்கள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது. சலூன், டீக்கடை, பூங்காக்கள் திறக்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது. சலூன், டீக்கடை, பூங்காக்கள் திறக்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கூடுதல் தளர்வுகள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையொட்டி கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து டீக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து முடி திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஹார்டுவேர், மின்சாதன பொருட்கள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணி, பாத்திரங்கள், அழகுசாதன பொருட்கள், ஜெராக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ஊட்டி கமர்சியல் சாலையில் செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்து செயல்பட்டன. மேலும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டது. அங்கு ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தவிர பேக்கரி கடைகள் திறக்கப்பட்டது. ஊட்டியில் புதிய தளர்வில் பல்வேறு கடைகள் நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்து செயல்பட தொடங்கியது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊட்டி நகராட்சி மார்க்கெட் திறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வியாபாரிகள் நடைபாதைகளில் காய்கறி, பழங்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல் ஊட்டி உழவர் சந்தை திறக்க அனுமதி இல்லை.
பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொதுமக்கள் கடைகளில் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பூங்கா திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மேலும் நடைபயிற்சி செல்ல அனுமதி இல்லை. தற்போது ஊரடங்கு தளர்வில் அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நடைபயிற்சிக்காக திறக்கப்பட்டது. அங்கு இதற்கு முன்பு கட்டணமின்றி நடைபயிற்சி சென்று வந்தனர். தற்போது மாதம் ரூ.200 கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி முதல் நாளான நேற்று கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற 30 பேர் நடைபயிற்சி சென்றனர். அனுமதி சீட்டு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசு அலுவலகங்கள்
வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை போன்ற துறை அலுவலங்களில் 100 சதவீத பணியாளர்கள் நேற்று முதல் பணிக்கு வந்தனர். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது. அங்கு தினமும் ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து பதிவேட்டில் குறிக்க வேண்டும். அதிக வெப்பநிலை காணப்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நீலகிரியில் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தாலும், வெளியிடங்களில் இருந்து வர இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் போலீசார் சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாகளில் மின் சாதன பொருட்கள், பாத்திரங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. இதனால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள முக்கிய பஜார்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு டீக்கடைகள், சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும் கூடலூர் நகரில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது போல இருந்தது.