நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
நாசரேத்:
நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
எலக்ட்ரீசியன்
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பேச்சி மகன் மூக்கன் (வயசு 28). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று மூக்கன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு படுத்துள்ளார். காலை 7 மணி அளவில் மூக்கனின் அண்ணன் சுடலை முத்துக்குமார் தனது தம்பி மூக்கன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்று உள்ளார். அங்கு மூக்கனை தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் எழும்பவில்லை. அப்போது தான் மூக்கன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மின்சாரம் தாக்கி சாவு
மேலும் செல்போன் சார்ஜர் போடுவதற்காக இருந்த ஒயரில் தூங்கும்போது எதிர்பாராதவிதமாக கை பட்டுள்ளது. அந்த ஒயரில் இருந்து கை வழியாக மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கத்திலேயே இறந்துள்ளது தெரியவந்தது. மூக்கனின் ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையே மின்சாரம் பாய்ந்தற்கான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுடலை முத்துக்குமார் நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு, பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.