மது வாங்கி தரும்படி தொல்லை கொடுத்த தொழிலாளி அடித்துக்கொலை

மது வாங்கி தரும்படி தொல்லை கொடுத்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை அடித்துக்கொன்றதாக மற்றொரு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-28 06:19 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் ரவுண்ட் பில்டிங் அருகில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆறுமுகம் தனது குடும்பத்தை பிரிந்து அந்த பகுதியில் நடைபாதையோரம் தங்கி, குப்பைகளை பொறுக்கி விற்று வந்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (39) என்பவரும் தங்கி, குப்பைகளை பொறுக்கி விற்று அதில் கிடைக்கும் பணத்தில் உயிர் பிழைத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், மது வாங்கி தரச் சொல்லி சிவகுமாரை தொந்தரவு செய்ததுடன், கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் ஆத்திரம் அடைந்த சிவகுமார், ஆறுமுகத்திடம் இருந்த கட்டை பறித்து திருப்பி தாக்கினார்.

இதில் கட்டையில் இருந்த ஆணி, ஆறுமுகம் தலையில் குத்தியதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்ததது தெரிந்தது. இதையடுத்து ஜெ.ஜெ.நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்