கும்மிடிப்பூண்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மேட்டுகாலனியில் வசித்து வருபவர் விஜயசாரதி (வயது 44). ஒப்பந்ததாரர். கடந்த 25-ந் தேதி இரவு இவரும், இவரது குடும்பத்தினரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கு இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிராம் தங்க நகை, கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முரளி (32), சந்தானம் (34) மற்றும் 15 வயது கொண்ட சிறுவன் உள்பட மொத்தம் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.