ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது- வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெட்ரோல்-டீசல் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை வைத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்திலும் சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆனது.
ரூ.100-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.76-க்கு விற்பனை ஆனது. நேற்று 30 பைசா அதிகரித்து ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.06-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.81-க்கு விற்பனையானது. நேற்று 23 பைசா அதிகரித்து ரூ.94.04-க்கு விற்பனையானது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.