கர்நாடகத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க 850 சப்-இன்ஸ்பெக்டர்களை நியமிக்க முடிவு - போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தகவல்
கர்நாடகத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க 850 சப்-இன்ஸ்பெக்டர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நிருபர்களிடம் கூறியதாவது;-
850 பேரை நியமிக்க முடிவு
கர்நாடகத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் நிலையத்திற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இருந்து வருகிறார். அது 2 சப்-இன்ஸ்பெக்டர்களாக மாற்றப்படும். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பணி மேற்கொண்டால், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் விசாரணையில் கவனம் செலுத்துவார்.
குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்டதில் மட்டும் கவனம் செலுத்த தனியாக சப்-இன்ஸ்பெக்டர் இருந்து வந்தார். அந்த பணி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 850 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 850 சப்-இன்ஸ்பெக்டர்களும், மாநிலத்தில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் போலீஸ் நிலையங்களை அடையாளம் கண்டு, அங்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார்.
கூடுதல் பொறுப்பு
கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவதன் மூலம் மற்ற போலீசாருக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையவும் வாய்ப்புள்ளது. ஒரு போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இருப்பதன் மூலம் இன்ஸ்பெக்டர்கள் விடுமுறையில் இருக்கும் போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கான சப்-இன்ஸ்பெக்டர், அந்த போலீஸ் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும். அதுபோல், சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்துடன், போக்குவரத்துக்கு என்று தனி போலீஸ் நிலையம் இல்லாத பட்சத்தில், அங்கு நடைபெறும் விபத்துகள் சம்பந்த வழக்குகளை சப்-இன்ஸ்பெக்டரே விசாரணை நடத்துவார்.
இதற்கு முன்பு சாதி சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை ஏட்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு தான் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது சாதி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து சப்-இன்ஸ்பெக்டர்களும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.