காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

சிவமொக்கா அருகே காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-27 21:05 GMT
தற்கொலை செய்த சவுந்தர்யா
சிவமொக்கா:

முகநூல் மூலம் பழக்கம்

  சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காடிகெகேரி கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் சமூக வலைத்தளமான முகநூல் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் உமேசுக்கும், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கோலகுண்டே பகுதியில் வசித்து வந்த சவுந்தர்யா(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

  இதனால் அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீடுகளுக்கும் தெரியவந்தது. ஆனால் உமேசும், சவுந்தர்யாவும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாதியை கூறி கொடுமை

  இதையடுத்து கடந்த ஆண்டு(2020) நவம்பர் மாதம் உமேசும், சவுந்தர்யாவும் நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர் ஒசநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் உமேசை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் உமேஷ் தனது பெற்றோர் வீட்டில் சவுந்தர்யாவிடம் வசித்து வந்தார். இதற்கிடையே உமேசுக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. அப்போது உமேஷ், சவுந்தர்யாவை அடித்ததாக தெரிகிறது. மேலும் உமேசின் தந்தை, தாய், சகோதரி ஆகியோரும் சவுந்தர்யாவை சாதியை கூறி அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

  மேலும் உமேசை விட்டு விலகும்படியும் சவுந்தர்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த சவுந்தர்யா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி அறிந்த ஒசநகர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்ததாக புகார்

  இந்த நிலையில் ஒசநகர் போலீஸ் நிலையத்தில் சவுந்தர்யாவின் தந்தை உதய் ஒரு புகார் அளித்தார். அதில் எனது மகள் சவுந்தர்யா தற்கொலை செய்யவில்லை என்றும், சவுந்தர்யாவை அவரது கணவர், மாமனார், மாமியார், மைத்துனி ஆகியோர் அடித்து கொலை செய்து உடலை தூக்கில் ெதாங்க விட்டனர் என்று கூறி இருந்தார்.
  
அந்த புகாரின்பேரில் உமேஷ், அவரது தந்தை, தாய், சகோதரி மீது ஒசநகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பரபரப்பு

  காதல் திருமணம் செய்து 7 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது ஒசநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்