2-வது ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2-வது ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், தனியார் அமைப்பு சார்பில் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 2-வது ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. டெல்டா பிளஸ் கண்டறியும் பரிசோதனை வசதி தமிழகத்தில் இல்லாததால் மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டெல்டா பிளஸ் பரிசோதனை செய்ய தேவையான கருவிகளை வாங்க தமிழக முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார். இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அனீஷ்சேகர், அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் உள்ளிட்ட துறை சார்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.