சிவகாசி அண்ணா மார்க்கெட்டில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சிவகாசி அண்ணா மார்க்கெட்டில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-27 19:31 GMT
சிவகாசி, 
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சிவகாசி அண்ணா மார்க்கெட்டில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
காய்கறி மார்க்கெட் 
சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில் காய்கறி கடைகள் தனியார் பள்ளி மைதானம், உழவர்சந்தை, பஸ் நிலையம் என 3 இடங்களில் பிரித்து நடத்தப்பட்டது.
 இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் காய்கறி வியாபாரிகள் வழக்கம்போல் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் இன்று முதல் (திங்கட்கிழமை) வியாபாரம் செய்ய சில கட்டுப்பாடுகளுடன் நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. 
முக கவசம் 
அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்த அனுமதி பெற்றுள்ள 143 வியாபாரிகளும், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் ஒப்படைத்து கடை திறப்புக்கான அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். 
மேலும் காய்கறி கடையில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்