வயல்களில் எலிகளை பிடிக்கும் தொழிலாளர்கள் 3 பெரிய எலிகள் ரூ.100-க்கு விற்பனை
வயல்களில் எலிகளை பிடிக்கும் தொழிலாளர்கள் 3 பெரிய எலிகளை ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர்.
தஞ்சாவூர்:-
வயல்களில் எலிகளை பிடிக்கும் தொழிலாளர்கள் 3 பெரிய எலிகளை ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர்.
எலிகள்
உணவு தானியங்களை சேதப்படுத்துவதால், எலிகளை விவசாயிகளின் பகைவன் என்றே கூறலாம். வயல் வரப்புகளில் வளை தோண்டி அவற்றில் வாழும் எலிகள் நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி சேதத்தை ஏற்படுத்தும்.
நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுத்தும். உணவு பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்காத நிலை இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வகையில் பெரும்பாலான எலி வகைகள், தானிய உணவு வகைகளை தான் தோண்டும் வளைகளுக்குள் பதுக்கி வைக்கின்றன. நெற்கதிர்கள் மட்டுமின்றி கோதுமை, மக்காச்சோளம், சிறுதானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகிய பல பயிர்களை எலிகள் சேதப்படுத்துகின்றன.
குறுவை சாகுபடி
இப்படி விளை பொருட்களை சேதப்படுத்தும் எலிகளை கிட்டி என்ற பொறியை வைத்து விவசாயிகள் பிடிப்பார்கள். அப்படியும் எலிகளை கட்டுப்படுத்த முடியாது. விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை பயிர் அறுவடைக்கு பின் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டி சமப்படுத்தியும், புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்துவது வழக்கம்.
தற்போது குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் எல்லாம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளில் வளை அமைத்து வசித்து வந்த எலிகள் எல்லாம் விளைநிலங்களை நோக்கி வந்துள்ளன. விளை நிலங்களில் பொந்து அமைத்து வசித்து வருகின்றன. இந்த எலிகளை பிடித்து விற்பனை செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குடும்பத்தினருடன் இந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
எலிபிடிக்கும் தொழிலாளர்கள்
தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் அருகே வெண்ணாற்றங் கரையோரம், வெட்டாறு கரையோரத்தில் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் இன்னும் குறுவை சாகுபடிக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. சில இடங்களில் வடிகாலில் வரக்கூடிய தண்ணீரை மட்டும் வயல்களில் உழவு செய்வதற்கு வசதியாக நிரப்பி வருகின்றனர். இந்தநிலையில் சாகுபடி பணியை தொடங்காத வயல்களில் எலிகளை பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் நேற்று ஈடுபட்டனர்.
வயல்களில் ஆங்காங்கே பொந்துகள் காணப்பட்டன. அந்த இடங்களை குறிவைத்து மண்வெட்டியை கொண்டு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த எலிகளை பிடித்தனர். உடனே எலியின் வாலை கொண்டே அதன் பற்களை உடைத்துவிட்டு, அவர்கள் கொண்டு வந்த பைகளில் போட்டு வைத்தனர். இந்த பணியில் வல்லம்புதூர் பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் ஈடுபட்டனர்.
விலைக்கு விற்பனை
இப்படி பிடிக்கப்படும் எலிகளை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய எலிகள் என்றால் ரூ.100-க்கு 4 எலிகளும், பெரிய எலிகள் என்றால் ரூ.100-க்கு 3 எலிகளும் விற்பனை செய்வதாக அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, நாங்கள் ஏற்கனவே ஒருவரிடம் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள். தற்போது விறகுகளை வெட்டி எரித்து மரக்கரித்துண்டுகளாக்கி விற்பனை செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி வயல்களில் எலிகளையும் பிடித்து விற்பனை செய்கிறோம். எலிகள் விற்பனையாகவில்லை என்றால் எலியை குழம்பு வைத்து உணவாக பயன்படுத்துவோம். எலிகளை வாங்குவதற்காக பலர் ஆர்வத்துடன் காத்து இருப்பார்கள் என்றனர். அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், மீன், புறா, நண்டு, இறால், முயல் என பல வகைகள் இருந்தாலும் நெல் அறுவடை பருவத்தில் எலியை விவசாயிகள் பலரும் உணவாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.