திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை இயக்கஓட்டிகள் கோரிக்கை
திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை இயக்கஓட்டிகள் கோரிக்கை;
திருப்பூர்;
திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை இயக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்று. கடந்த மாதம் நாள் ஒன்றின் பாதிப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்தையும் கடந்தது. இதன் பின்னர் 1500-க்கும் அதிகமாகவே நாள் ஒன்றின் பாதிப்பு சில நாட்கள் இருந்தது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் குறைந்துள்ளது. நாள் ஒன்றின் பாதிப்பு 400-க்கும் குறைவாக உள்ளது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளையும் மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது. இந்த தளர்வின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டு வந்த திருப்பூர் தற்போது, மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
சிக்னல்களை இயக்க கோரிக்கை
கடந்த சில மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்த பலரும் தற்போது தங்களது தொழில் தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக வெளியே சுற்றுகிறார்கள். இதனால் நேற்று திருப்பூர் மாநகரில் அவினாசி சாலை, குமரன் சாலை, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை என பல பகுதிகளில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. விடுமுறை நாட்கள் என்பதால் பலரும் வாகனங்களில் சுற்றித்திரிந்தனர்.
இதற்கிடையே கடும் ஊரடங்கு அமலில் இருந்த போது முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படாமல் இருந்தன. குறைவான வாகனங்கள் வருவதால் போலீசார் சிக்னலை இயக்கவில்லை. தற்போது வாகன போக்குவரத்து அதிகமாக நேற்று இருந்தது. ஆனால் முக்கிய சாலைகளில் சிக்னல்கள் இயக்கப்படாமல் இருந்ததால், வாகன ஓட்டிகள் பலரும் தாறு, மாறாக அங்கும் இங்குமாக சென்றனர். பலர் விபத்துகளில் சிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டது. எனவே சிக்னல்களை இயக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.