திருப்பூரில் காய்கறி வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூரில் காய்கறி வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-06-27 18:50 GMT
திருப்பூர்
திருப்பூரில் காய்கறி வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 
அலைமோதிய பொதுமக்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்றாக உள்ளது. தொற்று பாதிப்பில் வகை-1-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பூரில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கியதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை கடந்த 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதில் காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விற்பனைக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பூரில் பல்லடம் சாலை காய்கறி சந்தை, தென்னம்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தைகள், மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பொதுமக்கள் நேற்று அதிகாலை பொருட்கள் வாங்க குவிந்தனர். திருப்பூர் பல்லடம் சாலையில் புதிய பாலம் நிறைவு பெறும் இடம் தொடங்கி, தென்னம்பாளையம் சந்திப்பு வரை சாலையில் இருபுறங்களிலும் காய்கறி, பழங்கள், கீரை விற்பனை கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது. தென்னம்பாளையம் உழவர் சந்தை, அடுத்துள்ள மொத்த காய்கறி சந்தை, சில்லரை வியாபார சந்தை, இறைச்சி விற்பனை நடைபெறும் பகுதி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அனுமதி மறுப்பு
இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசார் சந்தையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தென்னம்பாளையம் மீன் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் வரத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கையாக சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அருகே மாற்று இடத்தில் சில வியாபாரிகள் மட்டும் மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் சாலையில் போக்குவரத்து தடைபடும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியது தென்னம்பாளையத்தில் மீன் கிடைக்காதவர்கள் காங்கேயம் சாலை சி.டி.சி. சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் மீன்கள் வாங்க குவிந்தனர். அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதுதவிர, குமார் நகர், பங்களா நிறுத்தம், பெரியார் காலனி, திருமுருகன்பூண்டி, பார்க் சாலை சந்திப்பு உட்பட மீன் வியாபாரம் நடைபெறும் பிற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நடவடிக்கை
ஆனால் இவ்வாறு காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்க கூடிய ஆயிரக்கணக்கான மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவலுக்கு பொதுமக்களே வாய்ப்பளிக்கும் சூழல் ஏற்பட்டது. 
மீன் வியாபாரம் நடைபெற்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதும், போலீசாரின் அறிவுரைகளை கேட்காமல் மக்கள் முண்டியடித்து மீன்களை வாங்கி சென்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்