‘ஸ்மார்ட் சிட்டி' செயலாக்க திட்டத்தில் விருதை கோட்டைவிட்ட திருச்சி மாநகராட்சி
‘ஸ்மார்ட் சிட்டி' செயலாக்க திட்டத்தில் திருச்சி மாநகராட்சி விருதை கோட்டைவிட்டது.
திருச்சி,
‘ஸ்மார்ட் சிட்டி' செயலாக்க திட்டத்தில் திருச்சி மாநகராட்சி விருதை கோட்டைவிட்டது.
‘ஸ்மார்ட் சிட்டி’
‘ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம் ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிதியிலிருந்து மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா உருவாக்குதல், உய்யகொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, வணிக வளாகங்கள் கட்டுதல், சத்திரம் பஸ் நிலையம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் இதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய அரசு ஆய்வு செய்து சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளுக்கு விருதுகளை அறிவித்துள்ளது.
விருதை கோட்டை விட்டது
இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சிறப்பாக அமல்படுத்தி யதற்காக ஒட்டுமொத்த விருதை பெற்றுள்ளன. தமிழகத்தில் ஈரோடு, திருநெல்வேலி மாநகராட்சிகள் விருது பெற்றுள்ளன. அடுத்ததாக இரண்டாம் நிலை விருது பட்டியலுக்கு 71 மாநகராட்சிகளின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த பட்டியலிலும் திருச்சி மாநகராட்சியின் பெயர் இடம்பெறவில்லை. திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதே விருது பட்டியலில் இடம் கிடைக்காமல் கோட்டை விட்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.