வால்பாறை சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
வால்பாறை சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.;
வால்பாறை
வால்பாறை சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூட்டம் அலைமோதியது
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் வேலை செய்து வரும் தொழி லாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. எனவே அன்று வால்பாறை நகர்ப்பகுதியில் சந்தை நடக்கிறது.
எனவே இந்த சந்தைக்கு எஸ்டேட் பகுதி மற்றும் அங்குள்ள ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்வது வழக்கம்.
அதன்படி சந்தை நடந்தது. இந்த சந்தையில் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.
சமூக இடைவெளி இல்லை
அதில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். ஒரு சிலர் முகக்கவசம் அணியவில்லை. அத்துடன் சமூக இடைவெளி என்பதை பொதுமக்கள் மறந்துவிட்டனர்.
அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக வால்பாறையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் இதுபோன்று சமூக இடைவெளியை மறந்து ஒரே இடத்தில் திரண்டால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே இதுபோன்று சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
ஒத்துழைக்க வேண்டும்
சந்தை நடக்கும் இடத்தில் பொருட்கள் வாங்க செல்வது முக்கியம்தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கொரோனா பரவல் இருக்கும் நேரத்தில் சமூக இடைவெளியை மறந்து இப்படி கூடினால் கண்டிப்பாக தொற்று பரவி விடும்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.