மரவள்ளிக்கிழங்கு செடிகளை நாசப்படுத்தி காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கோதவாடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கோதவாடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி
கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான கோதவாடி, கோடங்கிபாளையம், கொண்டாம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
8 மாத கால பயிரான இந்த செடிகளை சாகுபடி செய்ய நடவு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு ஆகிறது. 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். எனவே மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
இந்த நிலையில் கோதவாடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள மரவள்ளிக்கிழங்குகள் 6 மாதம் ஆகிவிட்டதால் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே திடீரென்று இரவில் அங்கு வந்த காட்டுப்பன்றிகள் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பிடுங்கி நாசப்படுத்தி உள்ளது.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதால் இங்குள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அவர்கள் கவலையடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நடவடிக்கை இல்லை
கோதவாடி குளத்தில் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உள்ளன. தற்போது அந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால், அங்கு சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக இரவு நேரத்தில் குளத்தில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் அருகே உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்த அட்டகாசம் செய்து வருகின்றன.
பொதுவாக மலையடிவார பகுதியில் இதுபோன்ற தொந்தரவு இருக்கும். ஆனால் எங்கள் பகுதி மலையடிவார பகுதியும் இல்லை. ஆனால் இங்கு எப்படி காட்டுப்பன்றிகள் வந்தது என்று தெரியவில்லை.
அவற்றின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இழப்பீடு
கடந்த 2 நாட்களாக 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங் களுக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு செடிகளை நாசப்படுத்தி உள்ளது. செடிகளை பிடுங்கி அதில் உள்ள கிழங்குகளை சாப்பிட்டுவிட்டு கடித்து போட்டு சென்று உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.