வடமாநிலங்களில் இருந்து ரெயிலில் வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

வடமாநிலங்களில் இருந்து ரெயிலில் வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Update: 2021-06-27 18:05 GMT
கோவை

கோவையில் தொற்று பரவல் குறைந்ததால் வடமாநிலங்களில் இருந்து ரெயிலில் வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பரவல்

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிர்பலி எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது.

இதன் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று முதல் (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதன்படி தனியார் தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர் களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரெயிலில் வந்த தொழிலாளர்கள்

இந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள், கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக ரெயில்கள் மூலம் கோவைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளனர். 

அவர்கள் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் ஈச்சனாரி, சூலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். 

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ரெயிலில் வந்த வடமாநில தொழிலாளர்கள் நேற்று கோவை ரெயில் நிலையம் அருகே கூட்டமாக அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர், வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். 

தடுப்பூசி செலுத்திய ஆவணங்கள்

இதையடுத்து சுகாதாரதுறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து  100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் செல்போன் எண், ஆதார் எண் மற்றும் சொந்த முகவரி, பணியாற்றும் நிறுவன முகவரி உள்ளிட்ட விவரங்கள் வாங்கி குறித்துக் கொண்டனர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப் பட்டது. அப்போது சிலர் சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுக்கு, சுகாதாரத் துறையினர், முகக்கவசம் வழங் கினர். மேலும் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் சிலர் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்களை காண்பித்தனர்.

மேலும் செய்திகள்