24 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை நகர், புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில்,24 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
மதுரை
மதுரை நகர், புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில்,24 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக போலீசாரும் சிறப்பு குழு அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை. போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கை எடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி மதுரை நகர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 24 கிலோ கஞ்சா சிக்கி உள்ளது. மதுரை திடீர்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பனராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலவாசல் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த மாம்மலை ராஜ், மணிகண்டன், சூர்யா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
இதுதவிர செல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது பாலாஜி என்பவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.இதுபோல் புறநகர்ப் பகுதியிலும் சிலைமான், கருப்பாயூரணி, சோழவந்தான் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.