கார்-ஸ்கூட்டர் மோதல்; கொத்தனார் பலி
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
கொத்தனார்
மார்த்தாண்டம் அருகே முளகுமூடு, கூட்டமாவுவிளையை சேர்ந்தவர் சிங்காராயன் மகன் கனிஷ் (வயது 42), கொத்தனார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கனிஷ் நேற்று தனது ஸ்கூட்டரில் குழித்துறை சென்றுவிட்டு மதியம் 1½ மணியளவில் முளகுமூடு நோக்கி புறப்பட்டார். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதின.
பரிதாப சாவு
இதில் கனிஷ் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்தது.
தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் கொத்தனார் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.