போளூரில் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த தாய் சுத்தியலால் அடித்துக்கொலை

போளூரில் செலவுக்கு பணம் தர மறுத்த தாயை சுத்தியலால் அடித்துக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-27 17:40 GMT
போளூர்

பணம் கேட்டு தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நடேசன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி விஜயா (வயது 55). இவர் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 30 வருடங்களாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் அன்பு என்ற அன்பழகன் (39). போளூரில் உள்ள செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இவர் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தாய் விஜயாவை தொந்தரவு செய்து பணம் பெறுவது வழக்கம். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் தாயாரிடம் வழக்கம்போல பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த அன்பு வீட்டில் இருந்த சுத்தியலை் எடுத்து தாய் விஜயாவின் தலையில் அடித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 
இது குறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விஜயாவின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் அதேப்பகுதியில் பதுங்கி இருந்த அன்பழகனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்