கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

தமிழகத்தில் நிதிநிலைமை மோசமாக இருந்தாலும் அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2021-06-27 17:30 GMT
திருவண்ணாமலை

கொரோனா நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்களுக்கும் நிவாரண பொருட்களை வாங்கினார். ரூ.1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் என ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- 

கட்டுப்படுத்தப் பட்டுள்ளது

தமிழகத்தில் நிதிநிலைமை மோசமாக உள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவார். இருப்பினும் கொரோனா தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிதியுதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு பணியில் தூய்மை பணியாளர்களின் பணியும் முக்கியமானது. கொரோனா தொற்றின் 3-ம் அலையை தடுக்கும் பணிக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணியும் அரசு செய்து வருகிறது. 

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வணிகர்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. மாநில மருத்துவ அணி தலைவர் கம்பன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்