காட்டு யானைகளை விரட்டக்கோரி போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்கள்
கூடலூர் அருகே குடியிருப்புக்குள் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடலூர்
கூடலூர் அருகே குடியிருப்புக்குள் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகா செளுக்காடி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 2 காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகள் தொடர்ந்து மீனாட்சி, காகா கடை, கோல்கேட், தனியார் தேயிலை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என பலமுறை வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
போராட்டம் நடத்த முயற்சி
இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி செளுக்காடி பகுதியில் திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறையினர் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் வனவர் செல்லதுரை, காப்பாளர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறித்து உடனுக்குடன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தால் அதை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.