மண்டபம் பகுதியில் நிறம் மாறிய கடல்

மண்டபம் பகுதியில் கடல்நீர் நிறம் மாறியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-06-27 17:20 GMT
பனைக்குளம், 
மண்டபம் பகுதியில் கடல்நீர் நிறம் மாறியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடல் நீர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியான கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து மண்டபம் தெற்கு துறைமுகம் மற்றும் வேதாளை வரையிலான கடற்கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நேற்று முதல் கடல் நீர் சற்று நிறம் மாறிய நிலையில் காணப்பட்டது.
குறிப்பாக, வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன் கரையோரத்தில் வெள்ளை நிறத்தில் நுரை போன்று படர்ந்த நிலையில் கடல்நீர் காட்சி அளித்து வருகிறது. மண்டபம் முதல் வேதாளை வரையிலான தென் கடல் பகுதியில் கடல் நீர் சற்று நிறம் மாறி பச்சை நிறத்தில் காணப்பட்டு வருவதுடன் கரையோரத்தில் உள்ள கடல் பகுதி அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. 
ஆய்வு
நிறம் மாறி காணப்பட்டு வரும் கடல் நீர் குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி மீனவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இதே சீசனில் ஒருவிதமான பச்சை நிற பாசிகள் கடலில் படர்ந்து கரையோரத்தில் உள்ள கடல் பகுதி முழுமையாக பச்சை நிறமாக மாறியதுடன் ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறுகையில், பச்சை பாசி மற்றும் பூங்கோரை என்ற 2 வகையான பாசிகள் கடலில் படர்ந்து வருவது தெரிந்துள்ளது. இது ஆரம்ப நிலை தான். இன்னும் நாட்கள் செல்ல செல்ல தான் இந்த 2 வகையான பாசிகளின் படரும் தன்மை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
2 வகை பாசிகள்
காற்று அதிகமாக வீசும் பட்சத்தில் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் இந்த பாசி அப்படியே கரை ஒதுங்கி அழிந்து விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. 2 வகையான பச்சை பாசிகள் மண்டபம் தென் கடல் பகுதியில் படர்ந்து வருவதால் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பெரும்பாலான மீன்கள் தங்குவதற்கான வாய்ப்புகள் இருக்காது. அனைத்தும் ஆழ்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து விடும்.” என்றார்.

மேலும் செய்திகள்