சிவப்பு மண்டல பாதிப்பு பகுதிகள் பாதியாக குறைந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்து வருவதால் கடந்த வாரம் இருந்ததை விட சிவப்பு மண்டல பகுதிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.;

Update: 2021-06-27 16:47 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்து வருவதால் கடந்த வாரம் இருந்ததை விட சிவப்பு மண்டல பகுதிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
நோய் தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கமும், பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட் டத்தில் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலையால் 19 ஆயிரத்து 514 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 389 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவலின் வீரியம் குறைய தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 580 ஆக்சிஜன் படுக்கைகளும், பரமக்குடியில் 193 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளன. 
2 ஆஸ்பத்திரிகளிலும் 27 பேர் மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை சுமார் 2 லட்சத்து 13 ஆயிரத்து 643 பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது 3 ஆயிரத்து 230 கோவேக்சின் தடுப்பூசிகளும், 9 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. 
தாக்கம் குறைவு
மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் தற்போது ஊரக பகுதிகளில் 85 இடங்களும், நகராட்சி பகுதியில் 7 இடங்களும், பேரூராட்சி பகுதியில் 14 இடங்களும் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது பேரூராட்சி பகுதிகளில் சிவப்பு மண்டலங்களின் பாதிப்பு கணிசமாக குறைந்து ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் சிவப்பு மண்டல எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. 
மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையின் பயனாக தற்போது மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஆயிரத்து 818 இடங்களும், நகராட்சி பகுதியில் 55 இடங்களும், பேரூராட்சி பகுதியில் 8 இடங்களும் என மொத்தம் 1,881 இடங்கள் நோய்த்தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் நோய்த்தொற்று இல்லாத பச்சை மண்டல பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஊரக பகுதியில் 38 ஆயிரத்து 708 பேரிடமும், நகர் பகுதியில் 412 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் 546 பேருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
நடவடிக்கை
கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட 514 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டதில் 13 ஆயிரத்து 954 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 167 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களிடம் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 39 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்