விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆண்டிப்பட்டி பெண்ணிடம் ரூ.15¾ லட்சம் மோசடி 4 பேருக்கு வலைவீச்சு
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரை சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா (வயது 35). இவர் பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய அசோக் என்ற நபர் சாரதாவுக்கு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு விண்ணப்பித்தால் அந்த வேலையை பெற்று கொடுப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய சாரதா வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். பின்னர் அசோக்குடன் சேர்ந்து விநாயக மூர்த்தி, அக்பர், ராஜாராம் ஆகியோர் சாரதாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு வேலை தொடர்பாக பேசினர்.
ரூ.15¾ லட்சம் மோசடி
பின்னர் பயிற்சி கட்டணம், தொழில்நுட்ப உபகரணங்களுக்கான கட்டணம், பயிற்சியின் போது தங்குமிட செலவு, சம்பளம் வழங்க வங்கிக்கணக்கு தொடங்குதல், அதிகாரிகளுக்கான கமிஷன் என பல காரணங்களை கூறி அவர்கள் சாரதாவிடம் பணம் கேட்டுள்ளனர். இதை சாரதா நம்பி அவர்கள் கேட்ட தொகையை பல தவணைகளாக வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில் சாரதா ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425 அனுப்பினார். ஆனால் அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
இதையடுத்து சாரதா வேலைக்கு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர்.
4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சாரதா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அசோக், விநாயக மூர்த்தி, அக்பர், ராஜாராம் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மோசடி செய்த 4 பேரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவர்கள் கொடுத்த வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.