தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ,மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2021 - 2022-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ-மாணவிகளுக்கு வயது 12-க்கு மேல் 25-க்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் படிப்பதற்கு மாணவ-மாணவிகள் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தவில், நாதசுரம் ஆகிய கலைகள் படிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் படிக்கிற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ-மாணவிகளும் அரசு விடுதியில் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதியும் செய்து தரப்படும்.
வேலைவாய்ப்பு
3 ஆண்டுகள் பயின்று அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்புகள் உள்ளன. மேலும் கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ய்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பணன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், டி.டி.மேலூர், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி-2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.