போச்சம்பள்ளியில் தடையை மீறி கூடிய ஞாயிறு சந்தை-ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்
போச்சம்பள்ளியில் தடைய மீறிய கூடிய ஞாயிறு சந்தையில் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமையில் சந்தை கூடுவது வழக்கம். மாநிலத்தின் 2-வது மிகப்பெரிய சந்தை இதுவாகும். இங்கு போச்சம்பள்ளி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருவார்கள். மேலும், ஆடு, கோழி விற்பனையும் அதிகமாக நடைபெறும்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஞாயிறு சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடைய மீறி சந்தை செயல்பட்டது.
பொதுமக்கள் குவிந்தனர்
இதேபோல் நேற்று சந்தை கூடியது. வியாபாரிகள் பலர் தங்களது கடைகளை திறந்திருந்தனர். பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், காய்கறிகறிகளை மும்முரமாக வாங்கி சென்றனர். மேலும் கால்நடைகள் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் போச்சம்பள்ளியில் 2-வது முறையாக தடையை மீறி ஞாயிறு சந்தை செயல்பட்டது, கொரோனா பரவல் அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.