ரேடியோ காலர் பொருத்துவதற்காக பாகுபலி யானையை தேடும் பணி தீவிரம்
ரேடியோ காலர் பொருத்துவதற்காக வனத்துறையினர் பாகுபலி யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.;
மேட்டுப்பாளையம்,
‘ரேடியோ காலர்’ பொருத்துவதற்காக வனத்துறையினர் பாகுபலி யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பாகுபலி யானை
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டு யானை கூட்டத்துடன் சேராமல் தனியாக சுற்றி வருகிறது. இந்த யானை அவ்வபோது விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக பாகுபலி யானையை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அந்த யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேடும் பணி தீவிரம்
இதனைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர்கள் பழனிராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்டறிவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு வனவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் 7 குழுக்களாக பிரிந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பாகுபலி யானை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த யானை சிறுமுகை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மரக் கிடங்கு வளாகத்துக்கு வந்தனர். டாக்டர் சுகுமார் தலைமையில் ஓய்வுபெற்ற வனத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மனோகரன், கால்நடை மருத்துவர்கள் அசோகன், ராஜேஷ், பிரகாஷ், ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் யானையை பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
ரேடியோ காலர் பொருத்த நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாகுபலி யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், அந்த யானையை சமவெளிப் பகுதிக்கு கொண்டு வந்து, அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்படும்.
பாகுபலி காட்டு யானை ரேடியோ காலர் பொருத்தும்பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டால், தமிழகத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் அனைத்து காட்டு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.