காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. படகில் இருந்த 10 மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு நாகூரான்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் லோகேஷ், துரியோதனன், சரவணகுமார், மோகன் ராஜ், ஹேமகுமார், ரட்சயன் உள்ளிட்ட 10 மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
நேற்று காலை 10 மணியளவில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா பட்டினம் துறைமுகம் அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் உணவு சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்தனர்.
அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு படகில் தீப்பிடித்து கொண்டது. அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென டீசல் டேங்கில் பற்றியது. இதனால் படகில் இருந்த 3 ஆயிரம் லிட்டர் டீசலுடன் விசைப்படகு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கரும்புகை மூட்டம் எழுந்தது.
உடனடியாக படகில் இருந்த மீனவர்கள் 10 பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தனர். இதனை பார்த்த அருகில் மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 மீனவர்களையும் உயிருடன் காப்பாற்றினர்.
இதுபற்றி மீனவர்கள் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். கடலில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த விசைப்படகில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.