கிணற்றில் தவறி விழுந்து 2 நாட்களாக தவித்த தொழிலாளி மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 நாட்களாக தவித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் தங்க பாண்டியன் (வயது 56). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 24-ந்தேதி மதியம் அங்குள்ள காட்டுப்பகுதியில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தங்கபாண்டியன் தவறி விழுந்தார்.
சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால், தங்கபாண்டியன் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் அவர், கிணற்றுக்குள் இருந்த துவார பகுதியில் ஏறி அமர்ந்து இருந்தார்.
கடந்த 2 நாட்களாக தங்கபாண்டியனை காணாததால், அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த கிணற்றின் அருகில் சிலர் சென்றபோது தங்கபாண்டியன் கூச்சலிட்டார். அப்போது கிணற்றுக்குள் இருந்த தங்கபாண்டியனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு அலுவலர் விஜயன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, தங்கபாண்டியனை பத்திரமாக மீட்டனர். 2 நாட்களாக கிணற்றுக்குள் தவித்த தொழிலாளியை மீட்ட தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.