சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை கண்டுபிடிப்பு; 5 பேர் கைது
கோலாரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோலார்:
போதைப்பொருள் தொழிற்சாலை
கோலார் புறநகர் பகுதியில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. அங்கு ஆந்திராவை சேர்ந்த ஒய்.வி.ரெட்டி, மேனன், என்.வி.ரெட்டி, அம்ருத் மற்றம் பாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போதைப்போருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரிப்பதும், அவற்றை கோலார், பீதர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இதையடுத்து அங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தும் ரூ.3 கோடி மதிப்பிலான 91 கிலோ அல்பாஜோலாம் வகை ரசாயன பொருள் உள்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மற்றும் ரூ.62 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒய்.வி.ரெட்டி, மேனன், என்.வி.ரெட்டி, அம்ருத் மற்றம் பாஸ்கர் ஆகிய 5 பேரை கைது செய்து அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது போதைப்பொருள் தயாரிப்பை இவர்கள் பகிரங்கமாகவே செய்து வந்துள்ளனர்.
கப்பல் மூலம் வரவழைத்தனர்
இவர்களுக்கு பல போலீஸ் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். போதைப்பொருள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து டார்க்நெட் உதவியுடன் கப்பல் மூலம் வரவழைத்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 5 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.