பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
வி.கைகாட்டி அருகே பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை வாலிபர் பறித்துச்சென்றார்.
வி.கைகாட்டி:
தாலிச்சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டம் காவனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(வயது 47). விவசாயி. இவர் நேற்று காத்தான்குடிகாடு அருகே அரிசி ஆலைக்கு சென்றார். அங்கு கடலை ஆட்டிவிட்டு கடலை புண்ணாக்கு, எண்ணெயோடு மதியம் வீட்டிற்கு நடந்து வந்தார்.
அப்போது எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். தமிழ்ச்செல்வியை தாண்டிச்சென்ற அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தமிழச்செல்வியின் பின்பக்கமாக சென்று, அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார்.
சூப்பிரண்டு விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி சுதாரிப்பதற்குள், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, தமிழ்ச்செல்வியிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து, தாலிச்சங்கிலியை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.