கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - சித்தராமையா வலியுறுத்தல்

கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-26 20:34 GMT
பெங்களூரு:

முதல்-மந்திரியாக வேண்டும்

  கர்நாடக காங்கிரஸ் கட்சியில், அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. அக்கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இது முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்துள்ள கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே.சிவக்குமார் புகார் அளித்தார். அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து இப்போது கருத்து கூறக்கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. கட்சி மேலிடத்தின் கட்டுப்பாட்டையும் மீறி, சில எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறினர்.

ஆலோசனை நடத்தினார்

  இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தபடி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட மூத்த தலைவர்கள் காணொலி மூலமாக கலந்து கொண்டனர்.

  மேலும் செயல் தலைவர்கள் ராமலிங்கரெட்டி, துருவ நாராயண், சதீஸ் ஜார்கிகோளி, ஈஸ்வர் கன்ட்ரே, சலீம் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

அரசுக்கு அழுத்தம்

  கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் ஒரே வழி. ஆனால் தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக அரசு சொல்கிறது. ஆனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

  அகில இந்திய காங்கிரஸ் உத்தரவுப்படி மக்களை சென்றடையும் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி மக்களை போய் சேரவில்லை. அதை எவ்வாறு பெறுவது என்பதும் மக்களுக்கு தெரியவில்லை. இந்த விஷயத்தில் மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் உதவ வேண்டும்.

அனைவருக்கும் கிடைக்க...

  கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக அரசு கூறியுள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் இந்த நிவாரணம் பி.பி.எல். குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த நிவாரணம் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கொரோனாவால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது. இதை நாம் கண்டுபிடித்து தகவல்களை வெளியிட வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்