இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதபை்பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-26 20:24 GMT
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்.
பெங்களூரு:

போலீஸ் மந்திரி பார்வையிட்டார்

  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, பெங்களூரு போலீசாரால் கடந்த ஒரு ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த போதைப்பொருட்களை, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்.

  பின்னர் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போதைப்பொருட்கள் விற்பனையை...

  கர்நாடகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க அரசும், போலீஸ் துறையும் தங்களது சக்தியை மீறி செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் பெங்களூரு உள்பட முக்கிய மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 60 சதவீத போதைப்பொருட்கள் கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.

  மீதி 40 சதவீத போதைப்பொருட்கள் தடயவியல் ஆய்வு முடிந்த பின்பு, கோர்ட்டு அனுமதி பெற்று அழிக்கப்படும். போதைப்பொருட்களை பயன்படுத்தி இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இதனால் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க அரசும், போலீஸ் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கர்நாடகத்தில் புதிய சட்டம்

  கர்நாடகத்திற்கு பிற பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருட்களை, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான் இணையதளம் மூலமாக விற்று வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போதைப்பொருட்கள் வாங்கி, விற்க பயன்படுத்தப்படும் இணையதளங்களையும் போலீசார் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர்.
  
போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் போதைப்பொருள் விவகாரத்திற்காக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது போலீசார் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கர்நாடகம் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

போலீசாருக்கு பாராட்டு

  பெங்களூருவில் நடந்த மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா கொலை காரணமாக, பெங்களூரு நகரவாசிகள் ஆதங்கம் அடைந்தனர். ஆனால் போலீசார் திறமையாக செயல்பட்டு மக்களிடையே இருந்த பயத்தை போக்கும் வகையில், கொலை நடந்த 24 மணிநேரத்திலேயே கொலையாளிகளை சுட்டுப்பிடித்திருந்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

  அதன்படி, போலீசார் திறமையாக செயல்பட்டு ரேகா கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேரை உடனடியாக கைது செய்திருக்கிறார்கள். இதற்காக போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளேன். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்திருப்பதன் மூலம் போலீஸ் துறைக்கு தனிப்பெருமை கிடைத்துள்ளது. கொரோனா சந்தர்ப்பத்திலும் போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களையும் விடாமல் கைது செய்து வருகிறார்கள்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனா் கமல்பந்த், கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் உடன் இருந்தார்கள்.

மேலும் செய்திகள்