ஜாமீனில் வெளிவந்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து- 2 சிறுவர்களுக்கு வெறிச்செயல்
லிங்கசுகூரு தாலுகாவில் ஜாமீனில் வெளிவந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய 2 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரு தாலுகா ரோடலபண்டா கிராமத்தை சேர்ந்தவர் காஜாபி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த ஷப்பீர் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து இவரது பெற்றோர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரவாராவை சேர்ந்த மெகபூப் என்பவருக்கு, காஜாபியை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். நிச்சயதார்த்தமும் நடந்தது. இதை ஏற்காத காஜாபி தனது காதலனான ஷப்பீருடன் சேர்ந்து மெகபூபை கொலை செய்தார். இதனால், காஜாபி மற்றும் அவரின் காதலன் ஷப்பீரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் காஜாபி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த நிலையில் நேற்று அடையாளம் தெரியாத சிறுவர்கள் 2 பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு காஜாபியை தாக்கினர். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்த காஜாபியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காஜாபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லிங்கசுகூரு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சிறுவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.