வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டெருமை பாறை மீது தவறி விழுந்து செத்தது

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க சென்ற காட்டெருமை பாறை மீது தவறி விழுந்து செத்தது.

Update: 2021-06-26 19:47 GMT

தேன்கனிக்கோட்டை:

காட்டெருமை
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அய்யூர், அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதிகளின் பல இடங்களில் சுற்றித்திரிகின்றன. மேலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கும்மனூர் கொல்லை என்ற வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்த 6 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று பாறை மீது தவறி விழுந்து வெளியே வர முடியாமல் செத்து கிடந்தது. நேற்று வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றபோது காட்டெருமை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பாறைகளுக்கு இடையே கிடந்த காட்டெருமையின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டெருமைக்கு பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்