மடத்துக்குளம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2021-06-26 19:38 GMT
போடிப்பட்டி:
மடத்துக்குளம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும் குழியுமான சாலை
உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக மெட்ராத்தி செல்லும் சாலையை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை மெட்ராத்தி செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பணத்தம்பட்டி, இச்சிப்பட்டி பகுதிகளுக்கு செல்பவர்களும், பொள்ளாச்சி-தாராபுரம் இணைப்பு சாலைக்கு செல்பவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
மழைக்காலங்களில்
மேலும் சேதமடைந்த சாலையால் புழுதி பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், அருகிலுள்ள விளை நிலங்களும் பாழாகும் நிலை உள்ளது. அத்துடன் இந்த பகுதி வழியாக கால்நடைகளை கொண்டு செல்லும்போது அடிக்கடி கரடு முரடான சாலைகளில் தடுமாறி காயமடையும் நிலை உள்ளது. 
மேலும் இந்த சாலையில் பி.ஏ.பி. பாலத்தின் மேல் உள்ள பகுதி மிகவும் சேதமடைந்து பள்ளமாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் பாலம் படிப்படியாக சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்