உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி ஆரஞ்சு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி ஆரஞ்சு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-06-26 19:34 GMT
போடிப்பட்டி, 
உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி ஆரஞ்சு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பணப்பயிர் சாகுபடி
ஆப்பிள் என்றதும் காஷ்மீர், இமாச்சல பிரதேசம் நினைவுக்கு வரும். அதுபோல அன்னாசி பழங்கள் கேரளாவிலும், திராட்சை, மாதுளை சாகுபடியில் கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களும், சாத்துக்குடி சாகுபடியில் ஆந்திராவும் முன்னணியில் உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் அதிக அளவில் ஆரஞ்சு மற்றும்  சாத்துக்குடி சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மாம்பழத்துக்கு சேலம், கொய்யாவுக்கு ஆயக்குடி என்று ஒருசில பகுதிகளைக் குறிப்பிட்டு சொல்லலாம்.
அதுபோல உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணப்பயிர்கள் எனப்படும் பழப்பயிர்கள் சாகுபடியில் ஒருசில விவசாயிகளே ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை முறை சாகுபடி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சாத்துக்குடி சாகுபடிக்கு தண்ணீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் பாங்கான நிலம் சிறந்ததாக இருக்கும். நமது பகுதியின் தட்பவெப்ப நிலை சாத்துக்குடி சாகுபடிக்கு உகந்ததாகவே உள்ளது. சாத்துக்குடி சாகுபடியைப் பொறுத்தவரை பராமரிப்பு குறைவான பயிர் என்று சொல்லலாம். சாத்துக்குடி நாற்று நடவு செய்து 3 ஆண்டுகளில் பூக்கத்தொடங்கும். அதிலிருந்து 7-வது மாதத்தில் அறுவடை செய்யத் தொடங்கலாம்.
குளிர்பிரதேசங்களில் விளையும் சாத்துக்குடியை விட நமது பகுதியில் விளையும் சாத்துக்குடி சுவை மிகுந்ததாகவும் சாறு அதிகம் உள்ளதாகவும் உள்ளது. இதற்கு காரணம் இயற்கை முறையில் சாகுபடி செய்வதா அல்லது நமது பகுதியின் மண் வளம் மற்றும் தட்ப வெப்பம்காரணமா என்று தெரியவில்லை. மேலும் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கொடுக்கும். வழக்கமான முறையில் நெல், கரும்பு, காய்கறிகள் என்று சாகுபடி செய்யும்போது சந்தைப்போட்டிகளை அதிகம்சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் இதுபோன்ற புதிய வகைப் பயிர்களை சாகுபடி செய்யும்போது உள்ளூரிலேயே பெருமளவு விளைச்சலை விற்பனை செய்துவிட முடிகிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தோலையும் வீணாக்காதீர்கள்
பழச்சாறுகளிலேயே மிகவும் ஆரோக்கியமானது சாத்துக்குடி சாறுதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடிக்கலாம். இதில் கலோரிகள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைந்த அளவே உள்ளது. எனவே உடல் எடை குறைப்புக்கான உணவுக்கட்டுப்பாட்டில் சாத்துக்குடி பழச்சாறுக்கு முக்கிய இடம் உண்டு.
பொதுவாக சளி பிடித்திருந்தால் பழச்சாறுகளை குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சளி பிடித்தவர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்துமா நோயாளிகளே சாத்துக்குடி சாறு அருந்தலாம். இதில் உள்ளவைட்டமின் சி வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் சக்தியை அதிகரிக்கிறது. சாத்துக்குடியின் தோலைக் காய வைத்துப் பொடி செய்து நாம் தினசரி குடிக்கும் பானங்களில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவடையும்.

மேலும் செய்திகள்