போதை பொருட்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை

போதை பொருட்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Update: 2021-06-26 19:28 GMT
கரூர்
ஆண்டுதோறும் ஜூன் 26-ந்தேதி, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கரூரில் நேற்று மதுவிலக்கு போலீசார் சார்பில், கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் 10581 என்ற கட்டணமில்லா எண் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டினார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், போதை பொருட்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமப்புறங்களில் 15 கிராமங்களுக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக போதை பொருட்களை தயாரிப்பது, விற்பனை செய்வது, கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச தண்டனையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். என்றார்.

மேலும் செய்திகள்