பெற்றோரின் அவசரத்தால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்; கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி,
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா காலகட்ட ஊரடங்கு
கொரோனா என்னும் கொடிய வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நோய் பரப்பும் சங்கிலியை அறுக்க பயன்பட்டாலும், ஊரடங்கினால் ஏற்பட்ட பின்விளைவுகள் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சம்பாத்தியம் போனாலும் பரவாயில்லை, உயிர் தான் முக்கியம் என கருதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு சமூகத்தில் ஏற்படுத்திய மற்றொரு மிகப்பெரிய பாதிப்பு குழந்தை திருமணங்கள் ஆகும். கொரோனா காலகட்டத்தில் தங்களது கடமையை நிறைவேற்ற பெற்றோர் காட்டிய அவசரத்தால் சில சிறுமிகள் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக நம் நாட்டில் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் தான் திருமண வயதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை எட்டும் முன்னர் நடத்தப்படுகிற திருமணங்கள் என்பது சட்டப்படி செல்லாது.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால்...
ஆனால் குறிப்பிட்ட வயதை எட்டும் முன்னரே தங்களது மகளை திருமணம் என்ற பந்தத்துக்குள் சில பெற்றோர் அனுப்பி விடுகிறார்கள். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராக இல்லாத சிறுமிக்கு திருமணம் நடைபெறும்போது, அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. குழந்தை திருமணங்கள் பல்வேறு காரணங்களால் நடத்தப்படுகின்றன. பெற்றோருக்கு தெரியாமல் காதல் வயப்படும் சிறுமிகள் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அப்போது அடிக்கடி தனது காதலனுடன் செல்போனில் பேசுகிறார்கள். இது பெற்றோருக்கு தெரிந்து விடுவதால் அவசர கதியில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
வறுமையில் இருக்கும் சிறுமியின் பெற்றோரை அணுகும் மாப்பிள்ளை வீட்டார் திருமண செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறுவதுடன், பெண்ணின் பெற்றோருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாலும் பணத்தை பெற்றுக்கொண்டு சிறுவயதிலேயே மகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். தற்போது பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் பெண் பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பது வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் சில பெற்றோர் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது கடமையை விரைந்து முடித்து மகளை ஒருவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று எண்ணுவதாேலயே குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணமாகிறது.
போக்சோ சட்டம்
இதுபோல் நடத்தப்படுகிற குழந்தை திருமணங்களுக்குபிறகு, அந்த சிறுமி சந்திக்கும் பிரச்சினைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. கணவன்-மனைவி இடையே தகராறு, சிறுவயதிலேேய கருவுற்று குழந்தையை சுமப்பதால் உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்பு, மன பக்குவம் இல்லாததால் குழந்தைகளை வளர்த்து எடுப்பதில் சிரமம் போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைக்கும்போது, தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் வாலிபரின் கோபம், திருமணம் செய்த சிறுமியின் மீது தான் ஏற்படுகிறது. இதனால் அந்த வாலிபர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்று விடுகிறார். ஆனால் ஏற்கனவே திருமணத்தை முடித்த சிறுமியின் எதிர்காலம் இருண்டு போய்விடுகிறது.
பெற்றோரின் கடமை
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கொரோனா கால கட்டமான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 237 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தமிமுனிஷா கூறுகையில், “18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் திருமணத்துக்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்பதையும், அவ்வாறு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சமூக நலத்துறை சார்பில்பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, திருச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதையும் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண் குழந்தைகள் சுயமாக நின்று வேலைவாய்ப்பு பெறுகிற வகையிலும், எதிர்காலத்தை சமாளிக்கக்கூடிய வகையிலும் கல்வியைத் தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அந்த கடமையை பூர்த்தி செய்த பின்னரே தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தடுக்க முடியும்” என்றார்.