பழனி அருகே உடலில் காயங்களுடன் மாந்தோப்பில் தவித்த சிறுத்தை சாவு
பழனி அருகே உடலில் காயங்களுடன் மாந்தோப்பில் தவித்த சிறுத்தை பரிதாபமாக இறந்தது. வேட்டையாட முடியாமல் பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்தது.
பழனி:
பழனி அருகே உடலில் காயங்களுடன் மாந்தோப்பில் தவித்த சிறுத்தை பரிதாபமாக இறந்தது. வேட்டையாட முடியாமல் பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்தது.
மாந்தோப்புக்குள் சிறுத்தை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வரதமாநதி அணை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான அங்கிருந்து, 2 கிலோமீட்டர் தொலைவில் அண்ணாநகர் என்ற மலைக்கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த மயில்சாமி என்பவருக்கு அதே பகுதியில் மாந்தோப்பு உள்ளது.
நேற்று காலை இவர், தனது மாடுகளை மேய்ச்சலுக்காக மாந்தோப்புக்கு கொண்டு சென்றார். அப்போது, அங்குள்ள மரத்தடியில் சிறுத்தை ஒன்று படுத்து கிடந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த மயில்சாமி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
உடலில் காயங்கள்
இதுகுறித்து பழனி வனத்துறையினருக்கு மயில்சாமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் திலீபன் தலைமையில், வனவர் அமுதராசு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறையினர், மாந்தோப்புக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அங்குள்ள மாமரத்தின் அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது. அது, 2 வயதே ஆன பெண் சிறுத்தை ஆகும். அதன் உடல் முழுவதும் சிறு, சிறு காயங்கள் இருந்தன.
குறிப்பாக பின்புறத்தில் உள்ள ஒரு காலில் பலத்த காயம் இருந்தது. இதனால் சிறுத்தையால், அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.
பரிதாப சாவு
இதற்கிடையே அந்த சிறுத்தையை பிடித்து, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சிறுத்தையை பிடிப்பதற்கு, கொடைக்கானலில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், வலை வீசி சிறுத்தையை பிடித்தனர்.
சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை வனத்துறையினர் மயக்கம் அடைய செய்தனர். இதனையடுத்து பழனியில் இருந்து வந்த கால்நடை டாக்டர் ரகுபதி மற்றும் மருத்துவக்குழுவினர் சிறுத்தைக்கு சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுத்தை பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட சிறுத்தையின் உடல், வனப்பகுதியிலேயே உயர் அதிகாரிகளின் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
பட்டினியால் உயிரிழந்த பரிதாபம்
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் திலீபன் கூறுகையில், மாந்தோப்பில் தவித்த சிறுத்தைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சிறுத்தையால் சுமார் 2 வாரங்களாக வேட்டையாட முடியவில்லை. எனவே இரை கிடைக்காமல் பசியால் கிறங்கி, அடர்ந்த வனப்பகுதியை விட்டு மாந்தோப்புக்குள் சிறுத்தை வந்து விட்டது. தொடர்ந்து பட்டினியாக இருந்ததால் உடல் சோர்ந்து, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர முடியவில்லை. வேட்டையாட முடியாமல் பட்டினியாக இருந்ததால் சிறுத்தை பரிதாபமாக இறந்துள்ளது என்றார்.