வன்னியர் சங்க பிரமுகரை கொலை செய்ய சதி: பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் கைது
வன்னியர் சங்க பிரமுகரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமனை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்:-
வன்னியர் சங்க பிரமுகரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமனை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்ய சதி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றின் தென்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிடைமருதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து விசாரணை நடத்த முயன்றனர். இதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலினை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருவிடைமருதூரை சேர்ந்த லாலி மணிகண்டன், அவரது அண்ணன் மகேஷ், செந்தமிழ்ச்செல்வன், முகமது யாசின், கோபி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லாரி மணிகண்டன் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பல மணிநேரம் விசாரணை
இதில் வாகன சோதனையின்போது பிடிபட்ட திருவிடைமருதூரை சேர்ந்த மகேஷ், செந்தமிழ்ச்செல்வன், மணிகண்டன், திருபுவனத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
சதி திட்டம் அம்பலமானதை தொடர்ந்து வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் வீடு உள்ள மருத்துவக்குடி பகுதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமனை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.
கைது
வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறையில் இருக்கும் லாலி மணிகண்டனை கைது செய்து கடந்த 24-ந் தேதி திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதனிடையே வழக்கில் வெங்கட்ராமனுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்த நிலையில் நேற்று அதிகாலை வெங்கட்ராமனை திருவிடைமருதூர் போலீசார் கைது செய்து, திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் முசிறி சிறையில் அடைக்கப்பட்டார்.