வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளி கைது
திருக்கோவிலூர் அருகே வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இவர் மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது
திருக்கோவிலூர்
மயங்கிய நிலையில் கிடந்த பெண்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நரிப்பாளையம் கிராமத்தில் உள்ள கோவிலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.10 ஆயிரம் கடன்
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்த 2 பேர், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கடனை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் கடன் வாங்கியவர்கள் கள்ளக்குறிச்சியில் இருப்பதாக அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண், பெங்களூருவில் இருந்து பஸ்சில் ஓசூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மினிலாரியில் இரவு 9 மணியளவில் திருக்கோவிலூருக்கு வந்தார். அவருடன் 2 பெண்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெருங்குரிக்கை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கப்பல்துரை(வயது 50) என்பவரும் வந்தார். அப்போது கப்பல்துரை வடமாநில பெண்ணிடம் இந்த நேரத்தில் இங்கு வாகனங்கள் எதுவும் வராது தன்னுடன் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு மறுநாள் காலை செல்லலாம் என்று நரிப்பாளையம் கிராமத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கைது
மேலும் அதிகாலை 3 மணியளவில் மீண்டும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அந்த பெண் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கப்பல்துரை பெண்ணின் தலையை பிடித்து அருகில் கிடந்த கல்மீது ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மயங்கியதும் கப்பல்துரை அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்த அந்த பெண் அங்கிருந்து கரும்பு தோட்டம் வழியாக நடந்து அருகில் உள்ள கோவிலுக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து கப்பல்துரையை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கொலை வழக்கு
குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கப்பல்துரை பெங்களூருக்கு தப்பி சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். தற்போது அவர் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய சம்பவத்தில் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
மேலும் கப்பல்துரை மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.