விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.நகரில் வண்ண முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பூஜையை முடித்து விட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலையில் கோவிலை திறப்பதற்காக வந்தபோது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து
அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் காணாமல் போயிருந்தது.
வலைவீச்சு
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தொியவந்தது.
உண்டியலில் சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.