சேத்தியாத்தோப்பு அருகே பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை தற்கொலை சிறையில் இருந்து ஜாமீனில் வந்தநிலையில் விபரீத முடிவு
சேத்தியாத்தோப்பு அருகே பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.;
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஏழுமலை என்கிற ராஜி (வயது 35). இவரது மனைவி சிவரஞ்சினி(30). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் சிவரஞ்சினி மருத்துவமனையில் இருந்து தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு செல்லாமல், கணவரின் வீட்டுக்கு வந்தார். குழந்தை பிறந்து 7-வது நாள்(பிப்ரவரி 18-ந்தேதி) ஏழுமலை, குழந்தையை பார்த்து சிகப்பாக உள்ளது, இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் அதன் கழுத்தை பிடித்து நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.
தற்கொலை
கல்நெஞ்சம் கொண்ட தந்தையின் செயலை கண்டு சிவரஞ்சினி அதிர்ந்து போனார். இதுபற்றி அவர் ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் ஏழுமலை வெளியேவந்தார் இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் அறையில்அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.