விருத்தாசலத்தில் தீ விபத்து 4 கூரைவீடுகள் எரிந்து சாம்பல் ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்

விருத்தாசலத்தில் நேர்ந்த தீ விபத்தில் 4 கூரைவீடுகள் எரிந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

Update: 2021-06-26 17:31 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த நாச்சியார் பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மோட்டார் கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொழுந்துவிட்டு எரிந்த தீ, அந்த பகுதியில்  இருந்த அசோகன் (வயது 54), அன்பழகன் மகன் முருகன் (35), கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி (60), தனலட்சுமி மகன் செல்வம் (40) ஆகியோரது கூரை வீட்டுகளின் மீதும் பரவி எரிய தொடங்கியது.

உடன் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் சிலர், வீடுகளுக்குள் சென்று அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்களை வெளியே தூக்கி வந்து போட்டனர்.

பொருட்கள் சாம்பல்

இதற்கிடையே தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 
ஆனால் தீவிபத்து நேர்ந்த பகுதியின் உள்ளே வாகனம் செல்ல இடவசதி இல்லை.  இதனால் தீயணைப்பு பணியில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் தான் தீ அணைக்கப்பட்டது.

இதில் சுமார்  8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்