2 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 12 லட்சம் பேரில் இதுவரை 2 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 12 லட்சம் பேரில் இதுவரை 2 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் படிப்படியாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 643 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும் 8ஆயிரத்து 185 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதன்படி பார்த்தால் இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் தடுப்பூசி போட தகுதி உடையவர்கள்.
நடவடிக்கை
இவர்களில் இதுவரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 643 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதால் 18 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதாலும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி வரத்தொடங்கி உள்ளதாலும் அனைவரும் தடுப்பூசி போட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 1,100 தடுப்பூசிகளும், ராமநாதபுரம் சுகாதார வட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7 ஆயிரத்து 630 தடுப்பூசி களும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 180 தடுப்பூசிகளும், பரமக்குடி சுகாதார வட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 ஆயிரத்து 430 தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது.
3-வது அலை
ஆக மொத்தம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 340 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதால் அந்தந்த பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2-வது அலை குறைந்து வரும் நிலையில் 3-வது அலையின் வேகம் அதிகஅளவில் தாக்கமாக இருக்கும் என்று கூறப்படுவதால் அனைவரும் தடுப்பூசி போட முன்வரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.