கோவை
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 2 வயது மகன் நிஷாந்த்.
இந்த சிறுவன் கடந்த 20-ந் தேதி வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது பொறையேறி மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கிக்கொண்டது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுக்குழாயில் சிக்கியிருப்பது வேர்க்கடலை தான் என்பதை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் அலி சுல்தான், மயக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்றினர்.
இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினரை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டினார்.
இது குறித்து நிர்மலா டீன் நிர்மலா கூறும்போது, அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்றி உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
பொதுவாக குழந்தைகள் உணவு பொருட்கள் சாப்பிடும் போது பேச்சுக்கொடுக்காமலும், சிரிக்காமல் இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.