அனுமதியின்றி மரங்களை வெட்டிய 7 பேர் மீது வழக்கு

ஊட்டி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டிய விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-26 16:13 GMT
ஊட்டி

ஊட்டி அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டிய விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மரங்கள் வெட்டி அகற்றம்

நீலகிரி வன கோட்டம் நடுவட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் இஞ்சி பயிடுவதற்காக அங்குள்ள மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெறப்பட்டது. 

வெட்டப்படும் மரங்களுக்கு பிணை வைப்புத்தொகை செலுத்தி அனுமதி பெற்ற 500 சில்வர் ஓக் மரங்கள் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இந்த மரங்களை கடந்த ஜனவரி மாதத்துக்குள் வெட்டி அகற்றி இருக்க வேண்டும் என்று அனுமதி கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்டதை தவிர்த்து கூடுதலாக நாவல் போன்ற 200 சோலை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

பணியிடை நீக்கம்

இதுகுறித்த புகாரின்பேரில் வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியின்றி மரங்கள் வெட்டியதை கவனிக்க தவறிய வனச்சரகர்கள் சிவா, குமார், வனவர் தரும சத்தி, வனக்காப்பாளர் நர்சீஸ் குட்டன் ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தனர். 

தொடர்ந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்திய சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக நில உரிமையாளர் கோயல்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை செய்ததில் மேலும் 7 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

7 பேர் மீது வழக்கு

அதாவது நில உரிமையாளரான கோயல்லாவின் குடும்பத்தினர் 3 பேர், கூடலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சஜீவன், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மருதுபாண்டியன், சுமேஷ், டிரைவர் அனிபா ஆகிய 7 பேர் மீது தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்