பெண் கொலையை மறைக்க முயன்ற தங்கும் விடுதி மேலாளர் கைது
ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை சம்பவத்தை மறைக்க முயன்ற தங்கும் விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி
ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை சம்பவத்தை மறைக்க முயன்ற தங்கும் விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
பெண் கொலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் புதுநகரை சேர்ந்தவர் மாகி(வயது 51). இவர் ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதியில் இரவு நேர டிபன் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் மாகிக்கும், ஊட்டி கியூ பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முஸ்தபா(56) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் சமீபத்தில் மாகி கொரோனா பாதித்து குணமடைந்து இருந்தார். அவரை நேற்று முன்தினம் ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு முஸ்தபா அழைத்து சென்றார். அங்கு அவர்கள் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென பணத்தகராறு ஏற்பட்டது. இதில் முஸ்தபா ஆத்திரம் அடைந்து, மாகியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
கைது
தொடர்ந்து பிணத்தை துணியால் சுற்றி காரில் ஏற்றி அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு மாகி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் நாடகமாடி பிணத்தை ஒப்படைக்க முயன்றார்.
ஆனால் அவர்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வந்து நடத்திய விசாரணையில் உண்மை வெளியானது. பின்னர் ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முஸ்தபாவை கைது செய்தனர்.
மேலாளர் கைது
இதற்கிடையில் அந்த தங்கும் விடுதியில் கொலை நடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அதை மறைக்க முஸ்தபாவுடன் இணைந்து மேலாளர் சேகர்(57) முயற்சி செய்து உள்ளார். மேலும் பிணத்தை அப்புறப்படுத்த உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சேகரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலையை மறைக்க முயற்சித்தது, கொலை வழக்கு ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.முஸ்தபாவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, சென்னையில் உள்ள கியூ பிரிவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.