பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் வசூல்
ஊட்டியில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இதையொட்டி பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஊட்டி
ஊட்டியில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இதையொட்டி பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதி சீட்டு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்படுகிறது.
அங்கு நடைபயிற்சி செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடும் அமலுக்கு வருகிறது. அதாவது இதுவரை பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ரூ.200(ஒரு மாதம்) கட்டணம் செலுத்தி நடைபயிற்சி செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த கட்டணம் செலுத்தி இதுவரை 15 பேர் பாஸ்(அனுமதி சீட்டு) பெற்று உள்ளனர்.
எச்சில் துப்பக்கூடாது
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணமின்றி வழக்கமாக நடைபயிற்சி செல்பவர்கள் 150 பேர் கட்டணமில்லா அனுமதி சீட்டு வைத்து உள்ளனர்.
அவர்கள் புதுப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். தினமும் 100 பேர் நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பூங்காவில் எச்சில் துப்பக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.